சாதனையை சொல்ல 65,000 பொதுக்கூட்டம் ஆம் ஆத்மி அறிவிப்பு
சாதனையை சொல்ல 65,000 பொதுக்கூட்டம் ஆம் ஆத்மி அறிவிப்பு
ADDED : நவ 22, 2024 10:19 PM

புதுடில்லி:“ஆம் ஆத்மி கட்சியின் சாதனையை சொல்ல 65,000 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்,”என, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
டில்லி சட்டபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளது. தலைநகர் டில்லியை கைப்பற்ற மத்தியில் ஆளும் பா.ஜ., தேர்தல் பணிகளைத் துவக்கி விறுவிறுப்பாக பணிகளை செய்து வருகிறது.
அதேநேரத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக டில்லியை ஆளும் ஆம் ஆத்மி, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. அதிலும் ஒரு படி மேலாக, 11 வேட்பாளர்களின் பெயர்களைக் கூட நேற்று முன் தினம் அறிவித்து விட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் 'ரேவ்டி பர் சர்ச்சா' என்ற பிரசார இயக்கத்தை அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, கெஜ்ரிவால் பேசியதாவது:
கட்சியின் மாவட்ட மற்றும் பூத் அளவிலான நிர்வாகிகள் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரத்தை வீடு வீடாக சென்று மக்களிடம் வழங்குவர். ஆம் ஆத்மி ஆட்சியில் டில்லி மக்களுக்கு எவையெல்லாம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்பதை இந்த துண்டு பிரசுரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே இவ்வாறு வழங்க முடியும் என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க, டில்லி முழுதும் 65,000 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இலவச மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி, பெண்களுக்கு பஸ் பயணம், முதியோர்களுக்கு ஆன்மிக யாத்திரை ஆகியவை டில்லி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல, பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் - விரைவில் துவக்கப்படும்.
ஆனால், ஆம் ஆத்மி அரசின் இந்த இலவச திட்டங்களை நிறுத்த மட்டுமே பா.ஜ., விரும்புகிறது. பா.ஜ., ஆட்சி நடக்கும் 20 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட மக்களுக்கு இந்த இலவசங்களை வழங்கவில்லை. அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். இந்த வசதிகளை எப்படி செய்வது என்பது ஆம் ஆத்மிக்கு மட்டுமே தெரியும்.
டில்லி அரசிடம் இருந்து பல அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டில்லிக்கு பா.ஜ., என்ன செய்தது என வாக்காளர்களிடம் கேட்போம்.
கடந்த பத்தாண்டுகளில் அரசின் வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்தியது மட்டும்தான் பா.ஜ.,வின் ஒரே சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.