ADDED : மார் 19, 2025 11:07 PM

பகர்கஞ்ச்:மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று அவையில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது.
மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வந்தது. இறுதி நாளான நேற்று பட்ஜெட் இறுதி செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. சாத் பூஜைக்கு கூடுதலாக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்காதவாறு, வடிகால்களை துார்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய கூட்டம் வழக்கம்போல் துவங்கியது. ஆனால் நிதி ஒதுக்கீடு தொடர்பாக, ஆளும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கும் எதிர்க்கட்சியான பா.ஜ., கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருகட்சி கவுன்சிலர்களும் மேசை, நாற்காலிகள் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்று, மேயர் மகேஷ் கிச்சி தோல்வியடைந்தார்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பா.ஜ., கவுன்சிலர்கள் தன்னிடம் இருந்து மைக்கை பறித்து அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட்டை இறுதி செய்ய, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
மேஜையில் நின்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சபையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களின் பட்டியலைக் கிழித்து எறிந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து சபை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சீர்குலைத்து, விவாதங்கள் நடைபெறாமல் தடுத்து வருகின்றனர். இந்த முறையும் அவர்கள் அதையே செய்தார்கள்.
ஒரு தலித் மேயரிடம் இதுபோன்ற நடத்தை பொருத்தமற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.