பஸ் வழித்தடங்களை குறைத்தது ஆம் ஆத்மி முதல்வர் ரேகா குப்தா குற்றச்சாட்டு
பஸ் வழித்தடங்களை குறைத்தது ஆம் ஆத்மி முதல்வர் ரேகா குப்தா குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 27, 2025 08:46 PM

புதுடில்லி:“தலைநகர் டில்லியில் உயிர்நாடியாக விளங்கும், பஸ் போக்குவரத்தில் முந்தைய ஆம் ஆத்மி அரசு வழித்தடங்களை குறைத்து, மக்களை சிரமப்படுத்தியது, என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
நரேலா ஏ-9 செக்டாரில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் கழக பணிமனை திறந்து வைத்து, 'தேவி' திட்டத்தின் கீழ், 105 மின்சார மினி பஸ்களை நேற்று துவக்கி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
இந்த மின்சார பஸ்களால் தலைநகரின் துாய்மை பாதுகாக்கப்படும். அதேபோல, இந்தப் பணிமனை, 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை உறுதிப்படுத்துகிறது.
உயிர் நாடி
தலைநகர் டில்லியில் உயிர்நாடியாக பஸ் போக்குவரத்து விளங்குகிறது. ஆனால், முந்தைய ஆம் ஆத்மி அரசு பஸ் வழித்தடங்களை குறைத்து மக்களை மிகவும் சிரமத்தில் தள்ளியது.
அதேபோல, பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. போக்குவரத்துத் துறையில், 65,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது.
தேவி திட்டத்தின் கீழ் இயங்கும், ஒன்பது மீட்டர் நீளமுள்ள மின்சார பஸ்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
அவசர கால உதவிக்கான பொத்தான், கண்காணிப்புக் கேமரா, இருப்பிடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காகித டிக்கெட்டுக்குப் பதில், மின்னணு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ., ஆட்சி அமைத்தால், அரசு பஸ்சில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயணம் ரத்து செய்யப்படும் என ஆம் ஆத்மி பொய்களைப் பரப்பியது. ஆனால், ஊழலை வெளிக்கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங், “இந்த பஸ்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி அரசு அதைச் செய்யத் தவறி விட்டது. தேவி திட்ட மின்சார பஸ்கள் இதற்கு முன் பச்சை நிறத்தில் இருந்தன. தற்போது ஆரஞ்சு நிறத்தில் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,” என்றார்.
தவறான தகவல்
வடமேற்கு டில்லி லோக்சபா எம்.பி., யோகேந்தர் சந்தோலியா, “ஆம் ஆத்மி அரசு மின்சார மின் பஸ்களை இயக்கவில்லை. ஆனால், தங்கள் அரசின் திட்டதை தேவி என பெயர் மாற்றியிருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறது,”என்றார்.
தேவி திட்ட மினி மின்சார பஸ்சில், 23 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 17 பேர் நின்று பயணம் செய்யலாம். மாநகரின் குறுகிய சாலைகளிலும் செல்லும் வகையில் இந்த மினி பஸ்கள் வடிவமைக்கப்பட்டுஉள்ளன.
டில்லியில் தற்போது, 2,000 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 2027ம் ஆண்டுக்குள் அனைத்து பஸ்களும் மின்சார பஸ்களாக மாற்ற டில்லி அரசு திட்டமிட்டுஉள்ளது.