மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் வழக்கு தொடர ஆம் ஆத்மி முடிவு
மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் வழக்கு தொடர ஆம் ஆத்மி முடிவு
ADDED : செப் 28, 2024 07:29 PM
புதுடில்லி:“அரசியலமைப்புக்கு எதிராக, சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோதமாக மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் நடத்தப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தாக்கல் செய்யும்,” என, முதல்வர் அதிஷி கூறினார்.
டில்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினராக இருந்த பா.ஜ., கவுன்சிலர் கமல்ஜித் செராவத், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கவுன்சிலர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடந்தது. முறைப்படி தகவல் அனுப்பவில்லை என்பதால், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். பா.ஜ., கவுன்சிலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஆதிஷி நேற்று கூறியதாவது: டில்லி மாநகராட்சியைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி கட்சி தயாராகவே இருக்கிறது. நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் விதிமுறைப்படி நடத்தப்படவில்லை. துணைநிலை கவர்னர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் நடத்தி பா.ஜ., கவுன்சிலர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். மாநகராட்சி கூட்டத்தை மேயர் மட்டுமே கூட்ட முடியும். ஆனால், விதிமுறைக்கு மாறாக கவர்னர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கூட்டத்தை நடத்தி தேர்தலையும் நடத்தியுள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிராக, சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோதமாக மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.