டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நிதி உதவி செய்கிறது ஆம் ஆத்மி
டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நிதி உதவி செய்கிறது ஆம் ஆத்மி
ADDED : ஆக 17, 2025 02:31 AM

புதுடில்லி:டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்பும், ஆனால் செலவு செய்ய இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் நிதியுதவி உட்பட அனைத்து ஆதரவும் அளிக்கும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநிலத் தலைவர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:
டில்லி பல்கலை மாணவர் சங்கத்தில் பண பலத்தை முடிவுக்கு கொண்டு வருவதே ஆம் ஆத்மியின் நோக்கம். ஒரு மாணவருக்கு ஜனநாயக வழியில் வெற்றி பெற திறமை இருந்தும், தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பணம் இல்லாததால் பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறார்.
இதுபோன்ற மாணவர்களை தகுதி அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சியின், மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் ஆதரிக்கும். அவர்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை செய்து, தேர்தலில் ஆதரவு அளிக்கும். இதற்கான விண்ணப்பங்களை வரும், 25ம் தேதி வரை வழங்கலாம்.
கல்லுாரி மாணவர்களை இலவச சினிமா டிக்கெட் மற்றும் ஆடம்பர விருந்து ஆகியவற்றால் அழிக்காமல் பாதுகாப்பதே ஆம் ஆத்மியின் நோக்கம் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரை, குறைந்தபட்சம் ஐந்து கல்லுாரிகளில் இருந்து 50 பேர் முன்மொழிய வேண்டும்.
மேலும், கல்லூரி அளவிலான வேட்பாளர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்லுாரியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். மேலும், ஒரு நிமிட வீடியோ மற்றும் 200 முதல் 500 வார்த்தைகள் கொண்ட கொள்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர் சங்கத் தேர்தல்கள் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் முதல் நேரடி அனுபவம். இதுதான், அவர்களின் எதிர்கால அரசியல் கலாசாரத்தை வடிவமைக்கின்றன.
ஆனால் இன்று, மாணவர் சங்கத் தேர்தலுக்கே சொகுசு கார்கள், ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதில் இருந்துதான் அரசியல் ஊழல் துவங்குகிறது. இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா கூறுகையில், “இது ஒரு துவக்கம். தலைமைத்துவ திறன், பேச்சுத்திறன் மற்றும் தகுதி ஆகியவற்றை அளவுகோலாக வைத்து ஆம் ஆத்மியின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சுத்தமான அரசியலை விரும்பினால், அது கல்லுாரிகளில் இருந்துதான் துவக்க வேண்டும்,”என்றார்.
டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை மறுநாளும் நடக்கிறது.