கெஜ்ரிவால் வீட்டு முன் குப்பை கொட்டும் போராட்டம் ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் கைது
கெஜ்ரிவால் வீட்டு முன் குப்பை கொட்டும் போராட்டம் ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் கைது
ADDED : ஜன 30, 2025 11:19 PM

விகாஸ்புரி:முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே குப்பை கொட்டும் போராட்டம் நடத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் கைது செய்யப்பட்டார்.
பெரோஸ்ஷா சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் தலைமையிலான பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது மூன்று மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட குப்பை, கெஜ்ரிவால் வீட்டுமுன் கொட்டினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பதாகைகளை ஏந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடத்தியவர்கள் முன் சுவாதி மாலிவால் பேசுகையில், “நகரில் உள்ள தெருக்கள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பாளர்களுக்கு கடுமையான சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்துகிறது,” என குற்றஞ்சாட்டினார்.
சிறிது நேரத்திலேயே, போராட்டம் நடத்திய சுவாதி மாலிவாலை பெண் போலீசார் தடுத்து நிறுத்தி, அந்த இடத்திலிருந்து அகற்றினர். அவர் பார்லிமென்ட் தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
தடை உத்தரவுகளை மீறியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் சுவாதி மாலிவால் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக, அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியை ஒரு பெரிய குப்பைக் கிடங்காக மாற்றுவதை உறுதி செய்து வருகிறார். சாலைகள் சேதமடைந்துள்ளன. வடிகால்கள் நிரம்பி வழிகின்றன. எல்லா இடங்களிலும் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெண்களும் குழந்தைகளும் சுகாதாரமற்ற நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை,” என்றார்.

