மதராசி கேம்ப் தமிழ் குடும்பங்களை வெளியேற்ற ஆம் ஆத்மி எதிர்ப்பு
மதராசி கேம்ப் தமிழ் குடும்பங்களை வெளியேற்ற ஆம் ஆத்மி எதிர்ப்பு
ADDED : ஏப் 16, 2025 08:42 PM
ஜல்விஹார்:மதராசி முகாமின் குடிசைப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் தமிழ் குடும்பங்களை 50 கி.மீ., தாண்டி நரேலாவுக்கு இடம் மாற்றம் செய்ய முற்பட்டுள்ளதற்கு ஆம் ஆத்மி கட்சியின் டில்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஏழைகளின் தலைக்கு மேல் உள்ள கூரைகளைப் பிடுங்கி எறியும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்திருந்தார். இப்போது அதுதான் நடக்கிறது.
மதராசி முகாமில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை இடமாற்றுவதற்கு டி.டி.ஏ., வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இடம்பெயரும் குடும்பங்களில் பலரின் பூர்வீகமான தமிழ்நாட்டில் ஓட்டு சேகரிக்கும்போது, பா.ஜ., என்ன செய்யும்? இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கட்டாய இடமாற்றம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். அவர்களில் பலர் வீட்டு உதவியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு உணவு விற்பனையாளர்களாக அருகில் வேலை செய்கின்றனர்.
தமிழ் கற்பிக்கப்படும் உள்ளூர் பள்ளிகளில் அந்த குழந்தைகள் படிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் 50 கி.மீ., பயணம் செய்ய முடியுமா?
இவர்களுக்கு நரேலாவில் வழங்கப்படும் குடியிருப்புகளில் மோசமான நிலையில் இருக்கின்றன. அடிப்படை வசதிகளும் இல்லை. டில்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் கொள்கையின்படி, தற்போதுள்ள குடிசை வாசிகளை 5 கி.மீ., சுற்றளவில் மாற்று வீடுகளை வழங்க வேண்டும். ஆனால் 50 கி.மீ.,க்கு அப்பால் இடமாற்ற அரசு முற்பட்டுள்ளது.
தன் முதலாளித்துவ நண்பர்களிடம் நிலத்தை ஒப்படைக்கும் அதே வேளையில் ஏழைகளின் வீடுகளை பா.ஜ., பறிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.