மக்களிடம் அம்பலமாகி விட்ட ஆம் ஆத்மி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மக்களிடம் அம்பலமாகி விட்ட ஆம் ஆத்மி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ADDED : ஜன 22, 2025 08:39 PM
புதுடில்லி,:“ஒவ்வொரு தொகுதியிலும், 50 சதவீத ஓட்டுச் சாவடிகளில் நாம் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு தேர்தல் பணியை செய்ய வேண்டும்,”என, பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவடு முறையாக ஆளும் ஆம் ஆத்மி மற்றும் தலைநகர் டில்லி ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்துக் களம் இறங்கியுள்ளன.
தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், பா.ஜ., பூத் கமிட்சி உறுப்பினர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மோடி பேசியதாவது:
டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு என்பது அம்பலமாகிவிட்டது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆம் ஆத்மியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்தும் தினமும் ஒரு தகவல் வெளியாகிறது. ஆனாலும், ஆம் ஆத்மி கட்சி தினமும் ஒரு வாக்குறுதியை வெளியிட்டு வருகிறது.
பூர்வாஞ்சல் மக்களை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற ஆம் ஆத்மி சதி செய்து வருகிறது. இதனால், பூர்வாஞ்சல் மக்கள் ஆம் ஆத்மி மீது கடும் வெறுப்பில் உள்ளனர்.
பொய் மற்றும் வஞ்சகத்தில்தான் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது. ஆம் ஆத்மியைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் கடந்த 25 ஆண்டுகளில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் பிறந்தவர்கள் அல்லது 35- - 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் துரோகம் குறித்து நன்றாகத் தெரியும். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மீது டில்லி மக்கள் நம்பிக்கையை இழந்து விரக்தியில் இருக்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியை தோற்கடித்தால் மட்டுமே, வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டில்லியை மாற்ற முடியும்.
டில்லி மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்கத் தவறி விட்டது ஆம் ஆத்மி அரசு. டில்லியில் தாரளமாக மது கிடைக்கும். ஆனால், குடிநீர் கிடைக்காது. டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு அமைந்தவுடன் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.
டில்லியை பேரழிவுக்கு உட்படுத்திய ஆம் ஆத்மி எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றவில்லை. ஆம் ஆத்மியை மக்களிடம் அம்பலப்படுத்த மோசமான சாலைகள், வடிகால் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பை ஆகியவற்றை 'வீடியோ' மற்றும் போட்டோ எடுத்து மக்களிடம் காட்ட வேண்டும். அதேபோல, மின் கட்டண உயர்வுக்கும் டில்லி அரசே காரணம். முதல்வர் பதவி வகித்தபோது, கெஜ்ரிவால் வசித்த அரசு பங்களாவில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, அரண்மனை போல மாற்றினார். இந்த விஷயங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
யமுனை நதியை சுத்தப்படுத்துவேன் என வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், அதை மறந்தே விட்டார். அதேபோல, ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியும் காற்றில் பறந்து விட்டது. ஆனால், நாடு முழுதும் ஏழைகளுக்கு ஆயிரக்கணக்கான வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி போலி வாக்குறுதிகளை மட்டுமே அறிவிக்கிறது. செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன் டில்லி அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
ஆம் ஆத்மியைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன.
நடுத்தர மக்கள் வசதியான வாழ்க்கைத் தரத்துக்காக மத்திய அரசு கணிசமான அளவு பணத்தைச் செலவு செய்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
டில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் தாரர்களின் வாழ்க்கைத் தரம் 8வது ஊதியக்குழு பரிந்துரையால் மாறும்.
பா.ஜ.,வின் அமோக வெற்றிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத ஓட்டுக்களை நாம் பெற வேண்டும். அதை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.