மின்வெட்டு குறித்து சட்டசபையில் விவாதிக்க ஆம் ஆத்மி வேண்டுகோள்
மின்வெட்டு குறித்து சட்டசபையில் விவாதிக்க ஆம் ஆத்மி வேண்டுகோள்
ADDED : ஏப் 01, 2025 09:12 PM
புதுடில்லி:'தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர், டில்லி மின்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட்டுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதம்:
தலைநகர் டில்லியில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புகார்கள் கூறியும் உடனடி தீர்வு எடுக்கப்படவில்லை. மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டில்லியில் நிலவும் மின்வெட்டு பிரச்னை குறித்து, சட்டசபையில் விவாதிக்க, விதி59-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குல்தீப் குமார், சட்டசபை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மின்வெட்டு காரணமாக, பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் முடங்குகின்றன'என கூறியுள்ளார்.
டில்லியில் 26 ஆண்டுகளுக்குப் பின், பிப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.,வுக்கும், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்து, அதைப் பறிகொடுத்த ஆம் ஆத்மிக்கும் இடையே, மின்தடை விவகாரம் அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங், “ஆம் ஆத்மி ஆண்ட 10 ஆண்டுகளில் மின்வெட்டே இல்லை. ஆனால், பா.ஜ., ஆட்சி அமைத்த ஒரே மாதத்துக்குள் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. பா.ஜ.,வுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை,”என, நேற்று முன் தினம் கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, “தடையற்ற மின்சாரம் வழங்குவது அரசின் அடிப்படைக் கடமை. அது ஒன்றும் ஆம் ஆத்மி அரசின் சாதனை அல்ல. பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் மோசமான மின்சார மேலாண்மைக்கு பெயர் பெற்ற உத்தர பிரதேசம் கூட தற்போது 24 மணி நேரமும் தடையில்லாமம் மின் வினியோகம் நடக்கிறது,”என்றார்.
முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “டில்லியில் மின்சார கட்டமைப்பை மிகவும் சிரமப்பட்டு அமைத்தோம். டில்லி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் சப்ளை செய்தோம். ஆம் ஆத்மியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. ஆனால், பா.ஜ., ஆட்சி அமைத்த ஒரே மாதத்தில் மின்கட்டமைப்பை சீர்குலைத்து விட்டனர்,”என, கூறியிருந்தார்.