ஆம் ஆத்மி கட்சியில் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்' அரசை விமர்சனம் செய்ததால் நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியில் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்' அரசை விமர்சனம் செய்ததால் நடவடிக்கை
ADDED : ஜூன் 29, 2025 09:58 PM

சண்டிகர்:பஞ்சாபில், அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., குன்வர் விஜய் பிரதாப் சிங், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட, அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., குன்வர் விஜய் பிரதாப் சிங், கட்சியின் அரசியல் விவகாரக் குழு எடுத்த முடிவின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என கூறப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா வீட்டுக்குள் கடந்த, 25ம் தேதி அதிகாலையில், ஊழல் தடுப்புப் பிரிவினர், 30 பேர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மஜிதியா, 'வீடியோ' ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான குன்வர் பிரதாப் சிங், சமூக வலைதளத்தில் மஜிதியாவின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்ட பதிவில், ''ஒரு குடும்பத்தின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
''அரசியல்வாதியாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், பணக்காரரோ ஏழையோ யாராக இருந்தாலும், அதிகாலையில் ஒருவர் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து சோதனை நடத்துவது ஏற்புடையது அல்ல.
''அரசு தன் சொந்த நலனுக்காக போலீஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவை தவறாகப் பயன்படுத்தியுள்ளது,'' என, கூறியிருந்தார்.
அதேபோல, மே மாதம் அமிர்தசரஸில் சாராயம் குடித்து பலர் உயிரிழ்ந்த நேரத்திலும் அரசை விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ்., அதிகாரியான குன்வர் விஜய் பிரதாப் சிங், ஐ.ஜி.,யாக இருந்தபோது, பஞ்சாபில் நடந்த சிறுநீரக மோசடி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு பிரபலம் அடைந்தார்.
கடந்த, 2021ல் போலீஸ் துறையில் விருப்ப ஓய்வு பெற்ற குன்வார் விஜய் பிரதாப் சிங், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, 2022ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அமிர்தசரஸ் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
ஆரம்பத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சியின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.