பா.ஜ., அரசு ராஜினாமா செய்ய முதல்வர் ரேகாவுக்கு ஆம் ஆத்மி கடிதம்
பா.ஜ., அரசு ராஜினாமா செய்ய முதல்வர் ரேகாவுக்கு ஆம் ஆத்மி கடிதம்
ADDED : ஆக 31, 2025 01:59 AM

புதுடில்லி:“மக்களை பாதுகாக்க முடியாவிட்டால், பா.ஜ., அரசு ராஜினாமா செய்ய வேண்டும்,”என, ரேகா குப்தாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடில்லி கால்காஜி கோவில் ஊழியர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கால்காஜி தொகுதி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங், முதல்வர் ரேகா குப்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கால்காஜி கோவில் ஊழியர் யோகேந்திர சிங்,35, பட்டப்பகலில் கோவில் அருகிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் சர்வசுதந்திரமாக நடமாடுகின்றன.
டில்லி மக்கள் தங்கள் வீடுகள், மார்க்கெட்டுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில் சட்டம் - ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
இம்மாத துவக்கத்தில், நிஜாமுதீனில் நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொல்லப்பட்டார். இந்திரப் பிரஸ்தா விரிவாக்கத்தில போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார். அதேபோல, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சமீபத்தில் உங்கள் மீதே கூட தாக்குதல் நடத்தப்பட்டது. நாட்டின் தலைநகரான டில்லியில், முதல்வருகே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்கள் எப்படி பாதுகாப்பாக நடமாட முடியும்?
டில்லி மாநகரின் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையே இந்தச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. உதவியற்ற நிலையில் டில்லி மாநகரப் போலீஸ் உள்ளது.
நான்கு இயந்திர பா.ஜ., அரசில் நான்கு இயந்திரங்களுமே பழுதடைந்து உள்ளன. டில்லி மக்களை பாதுகாக்க முடியாவிட்டால், ஆட்சியில் தொடரவும் பா.ஜ.,வுக்கு உரிமை இல்லை.
முதல்வர் உட்பட பா.ஜ.,வினர் உடனடியாக ராஜினாமா செய்வது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
கால்காஜி கோவில் ஊழியரை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு அந்தச் செயலை செய்யும் போது கைகள் நடுங்கவில்லையா? டில்லி மாநகரில் சட்டம் - ஒழுங்கு தோல்வியடையவில்லை என்றால், இந்த சம்பவத்துக்கு பா.ஜ., அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? நான்கு இயந் திர பா.ஜ., அரசு, தலைநகர் டில்லியை இவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

