பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் ரத்து ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கணிப்பு
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் ரத்து ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கணிப்பு
ADDED : செப் 18, 2024 07:48 PM
விக்ரம் நகர்:“டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள், கல்வி உள்ளிட்ட அனைத்து இலவச அரசுத் திட்டங்களும் நிறுத்தப்படும்,” என, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் எச்சரித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள், கல்வி உள்ளிட்ட அனைத்து இலவச அரசுத் திட்டங்களும் நிறுத்தப்படும்.
இந்த இலவசத் திட்டங்களை டில்லி மக்களுக்கு வழங்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே உத்தேசித்துள்ளார். பா.ஜ.,வின் எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டங்களை தொடர அவர் போராடி வருகிறார்.
இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள், கல்வி உள்ளிட்டவற்றை இலவசங்கள் என்று சொல்லி, டில்லி மக்களை அவமதிக்கிறார்கள். இலவச வசதிகளை மக்களுக்கு வழங்கக் கூடாது என்கிறார்கள். நகரின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இது உங்கள் நேரம். கெஜ்ரிவால் இல்லாவிட்டால், டில்லி மற்றும் அதன் மக்களின் கதி என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் இலவசக் கல்வி நிறுத்தப்படும்.
மொஹல்லா கிளினிக்குகள், இலவச மருத்துவ வசதிகள், இலவச பேருந்து பயணம். பெண்களுக்கு, முதியோர்களுக்கான இலவச யாத்திரை --என, இவை அனைத்தும் பா.ஜ.,வால் நிறுத்தப்படும்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தரமான பள்ளிகளைக் கட்டுவதில் அக்கட்சி தோல்வி அடைந்துவிட்டது.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அங்கு ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டப்படவில்லை. அங்கு பிரதமர் தன்னைப் புகைப்படம் எடுத்து, பள்ளியின் நிலையை மக்களுக்குக் காட்டுகிறார்.
கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களை சிறையில் அடைத்ததாகவும், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்சியை உடைக்க பா.ஜ., முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., மறுப்பு
ஆம் ஆத்மி தலைவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். மின்சாரம், தண்ணீர், ரேஷன் உள்ளிட்ட இலவச சேவைகள் தொடரும் என்று துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார்.
வீரேந்திர சச்தேவா,
டில்லி பா.ஜ., தலைவர்