போலீசை பயன்படுத்தி தில்லுமுல்லு பா.ஜ., மீது ஏ.ஏ.பி., பாய்ச்சல்!
போலீசை பயன்படுத்தி தில்லுமுல்லு பா.ஜ., மீது ஏ.ஏ.பி., பாய்ச்சல்!
ADDED : ஜன 22, 2025 08:37 PM

புதுடில்லி:“ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசாரத்தைத் தடுக்கவும், வாக்காளர்களை அச்சுறுத்தவும் டில்லி மாநகர போலீசை, மத்திய பா.ஜ., அரசு தவறாகப் பயன்படுத்துகிறது,” என, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து, பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டி தினமும் அறிக்கைகள் வெளியிடுகின்றன. அதேபோல, அனல் கக்கும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றன.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லி மாநகர போலீஸ் பாஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. டில்லி மக்களின் பாதுகாப்பு குறித்து போலீஸ் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அதேநேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரங்களை சீர்குலைக்க, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து டில்லி மாநகர போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரே என்னிடம் கூறினார். டில்லி மக்கள் ஒன்றிணைந்து பா.ஜ.,வுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். நடுநிலை வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு தடுக்க கூட அவர்கள் திட்டமிடுவர். டில்லியில் பா.ஜ., ஒரு வரலாற்று தோல்வியை எதிர்கொள்கிறது. அதனால்தான் போலீஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சிய குறிவைத்து இடையூறு செய்கிறது. போலீஸ் ஆதரவுடன் குண்டர்களையும் தேர்தல் களத்தில் பா.ஜ., இறக்கி விட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஆதிஷி, “கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்களை, பா.ஜ.,வினர் மிரட்டி வருகின்றனர். பா.ஜ., வேட்பாளரான ரமேஷ் பிதுரி, ஆம் ஆத்மி நிர்வாகிகளை மிரட்டி பா.ஜ.,வில் சேருமாறு கட்டாயப்படுத்தி வருகிறார். இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம். ஆம் ஆத்மியினர் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பதை பா.ஜ.,வினர் தடுக்கின்றனர்,”என்றார்.
இந்த பேட்டியின் போது, சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் உடனிருந்தார்.