ADDED : அக் 08, 2024 11:54 PM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், டோடா தொகுதியில் வென்று, தன் வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மி துவங்கி உள்ளது. அதே சமயம், கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில், அக்கட்சி சொதப்பி உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் டோடா தொகுதியில் போட்டியிட்ட மெஹ்ராஜ் மாலிக், 4,538 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., - தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை தோற்கடித்துள்ளார்.
இதன் வாயிலாக, ஜம்மு - காஷ்மீரில் ஆம் ஆத்மியின் வெற்றிக் கணக்கை அவர் துவக்கி வைத்துள்ளார். இவர், 2020ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2014 சட்டசபை தேர்தலில், டோடா தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது.
ஜம்மு - காஷ்மீரில் ஆம் ஆத்மியின் எதிர்பாராத வெற்றி, காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி
உள்ளது.
ஹரியானாவில் ஜீரோ
ஜம்மு - காஷ்மீரில் வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மி துவங்கியிருந்தாலும், கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.மாநிலம் முழுதும் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தும், ஆம் ஆத்மிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்துப் போகாததே அக்கட்சி தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.