துப்பாக்கி துடைத்தபோது விபரீதம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பலி
துப்பாக்கி துடைத்தபோது விபரீதம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பலி
ADDED : ஜன 11, 2025 11:27 PM

லுாதியானா: பஞ்சாபில், துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 'ட்ரிக்கர்' அழுத்தப்பட்டதில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., குர்ப்ரீத் பாசி கோகி உயிரிழந்தார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு லுாதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், குர்ப்ரீத் பாசி கோகி, 57.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில், உரிமம் பெற்ற கை துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின், 'ட்ரிக்கர்' அழுத்தப்பட்டதில், குர்ப்ரீத் மீது குண்டு பாய்ந்தது.
அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு, தயானந்த் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டதால், குண்டு பாய்ந்து, குர்ப்ரீத் பாசி கோகி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு முதல்வர் பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

