ADDED : நவ 24, 2024 08:48 AM

பாலக்காடு: பாலக்காடு அருகேயுள்ள, கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவிலில், ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு பிராயிரியில் உள்ள, கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவிலில், கார்த்திகை மாதம் ஆறாட்டு உற்சவம் நடப்பது வழக்கம்.நடப்பாண்டு உற்சவம், நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை, 5:30 மணி முதல் அபிஷேகம், பஞ்சகவ்யம், கலசாபிஷேகம் ஆகியவை நடந்தது. காலை, 10:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்சீவேலி நடந்தது. பகல், 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் பகவதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:15 மணிக்கு அம்மனுக்கு நிறமாலை, சந்தனக்காப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, கோவில் சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர். 6.30க்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
இரவு, செண்டைமேளம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அத்தாழபூஜையுடன் உற்சவம் நிறைவு பெற்றது.