ADDED : மார் 11, 2024 07:28 AM

துமகூரு : சிறுமியை பலாத்காரம் செய்ததாக மடாதிபதி பாலகங்காதர மஞ்சுநாத சுவாமி கைது செய்யப்பட்ட வழக்கில், போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி, சிறுமியின் குடும்பத்தை மிரட்டிய, மடாதிபதியின் சீடர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
துமகூரு, குனிகல் ஹங்கரஹள்ளி கிராமத்தில், வித்யா சவுடேஸ்வரி மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி பாலமஞ்சுநாத சுவாமி.
இவர் கடந்த மாதம் 10ம் தேதி, துமகூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், 'எனக்கு தோல் நோய் உள்ளது. எனது உதவியாளர் அபிலாஷ் கூறியதால், பெண் டாக்டர் ஒருவரிடம் வீடியோ காலில், எனது தோலில் இருக்கும் புண்களை காண்பித்தேன். என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர்' என்று கூறி இருந்தார்.
இதன்படி அபிலாஷ் உட்பட, ஆறு பேர் மீது வழக்குப் பதிவானது. தலைமறைவாக இருந்த அபிலாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 'மடத்தில் தங்கி படிக்கும் சிறுமியை, மடாதிபதி பாலமஞ்சுநாத சுவாமி தொடர்ந்து, பலாத்காரம் செய்து வருகிறார். அதற்கு நான் உடந்தையாக இருந்தேன்' என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து ஹுலியூர்துர்கா போலீசாருக்கு, துமகூரு சைபர் கிரைம் போலீசார், தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மடாதிபதி கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஹுலியூர்துர்கா போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் மடாதிபதி மீது அளித்த புகாரை, வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை, மனோஜ்குமார், 26 என்பவர் மிரட்டி உள்ளார். அவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
குனிகல் டவுனில் மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வரும் மனோஜ்குமார், மடாதிபதி பாலகங்காதர மஞ்சுநாத சுவாமியின் தீவிர சீடர். சாட்சியங்களை அழிக்கவே, சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்து உள்ளது.
