இரண்டு முறை கருவை கலைத்து கொடுமை; கணவர் வீட்டின் முன் இளம்பெண் 'தர்ணா'
இரண்டு முறை கருவை கலைத்து கொடுமை; கணவர் வீட்டின் முன் இளம்பெண் 'தர்ணா'
ADDED : மார் 19, 2024 10:27 PM
சித்ரதுர்கா : இரண்டு முறை கருவை கலைக்க வைத்தது மட்டுமின்றி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி, கணவர் வீட்டின் முன், இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.
சித்ரதுர்காவின் ஆதர்ஷ் நகரில் வசிப்பவர் விகாஸ், 27. ஜவுளிக்கடை நடத்துகிறார். இவருக்கும் ஷில்பா, 25, என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
சில மாதங்களாக, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி ஷில்பாவுக்கு, மாமனார் விஜயகுமார், மாமியார் ஆஷா, சின்ன மாமனார் திப்பேசாமி ஆகியோர், தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
'கணவருடன் சேர்ந்து வாழவிட மாட்டோம்' என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற ஷில்பா, பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பின்னரும் அவரை அவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
நேற்று காலை, கணவர் வீட்டின் முன், ஷில்பா தர்ணா போராட்டம் நடத்தினார்.
'திருமணம் ஆன இரண்டு மாதங்களில் கர்ப்பம் ஆனேன். குழந்தை வேண்டாம் என்று கூறி, கருக்கலைப்பு மாத்திரையை, மாமியார் ஆஷா கொடுத்தார்.
அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து, மீண்டும் கருவுற்றேன்.
சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். என் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று, அந்த சாமியார் கூறியதால், மீண்டும் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, கருவை மாமியார் கலைத்துவிட்டார்.
வரதட்சணை வாங்கி வரும்படி தொல்லை கொடுப்பதுடன், கணவருடன் சேர்ந்து வாழ விட மறுக்கிறார். எனக்கு கணவர் வேண்டும்' என, கண்ணீருடன் கூறினார்.
இதுபற்றி அறிந்த சித்ரதுர்கா எம்.எல்.ஏ., வீரேந்திரா, இளம்பெண்ணிடம் பேச்சு நடத்தி ஆறுதல் கூறினார். போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க அழைத்துச் சென்றார்.

