தலைமறைவான 'சீரியல் கில்லர்' 24 ஆண்டுக்கு பின் சிக்கினார்
தலைமறைவான 'சீரியல் கில்லர்' 24 ஆண்டுக்கு பின் சிக்கினார்
UPDATED : ஜூலை 07, 2025 02:33 AM
ADDED : ஜூலை 06, 2025 11:29 PM

புதுடில்லி: உத்தராகண்டில், நான்கு டாக்சி டிரைவர்களை கொன்று, அவர்களின் கார்களை நேபாளத்தில் விற்ற 'சீரியல் கில்லரை', டில்லி போலீசார் 24 ஆண்டுகளுக்கு பின் கைது செய்துள்ளனர்.
டில்லியைச் சேர்ந்தவர் அஜய் லம்பா, 48. இவர் மீது கொள்ளை, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சப்ளை செய்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவை அனைத்திலும், அஜய் லம்பாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2001ல் உத்தராகண்டில் அடுத்தடுத்து கார் டிரைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அஜய் லம்பாவிற்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அஜய் லம்பாவை, 24 ஆண்டுகளுக்கு பின் டில்லி போலீசார் கைது செய்தனர்.
அடுத்தடுத்து கொலை
டில்லி போலீசார் தரப்பில் கூறியதாவது:
அஜய் லம்பா, மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும், 2001ல் நடந்த தொடர் கொலைகளில் ஈடுபட்டதற்கான எந்த சந்தேகமும் அவர் மீது எழவில்லை.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த தீரேந்திரா. திலீப் நேகி ஆகியோரை கைது செய்தபோது, அஜய் லம்பாவுடன் இணைந்து அக்கொலைகளை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, லம்பாவையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், 2001ல் டில்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நான்கு டாக்சி டிரைவர்களை அடுத்தடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதற்காக, வாடகை டாக்சியை எடுத்து, உத்தராகண்டின் மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்வர்.
தீவிர விசாரணை
அங்கு, டிரைவரை கொன்று, உடலை மலைப்பகுதியில் வீசிவிட்டு, காரை நம் அண்டை நாடான நேபாளத்தில் விற்றுவிடுவர். இதுபோல், நான்கு டிரைவர்களை இக்கும்பல் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
எனினும், இவர்கள் மேலும் பலரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.