பிரதமர் மோடியை தலைவராக ஏற்கிறேன் முன்னாள் பிரதமர் தேகவுடா புகழாரம்
பிரதமர் மோடியை தலைவராக ஏற்கிறேன் முன்னாள் பிரதமர் தேகவுடா புகழாரம்
ADDED : ஜன 20, 2024 05:56 AM

மாண்டியா: ''பிரதமர் நரேந்திர மோடி, நாடு கண்டிராத சிறந்த தலைவர். 60 ஆண்டுகளில் நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், இப்போது மோடியை முழு மனதுடன் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்,'' என ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரியில் நேற்று நடந்த பாலகங்காரதநாத சுவாமிகள் ஜெயந்தி உற்சவத்தில் தேவகவுடா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி, நாடு கண்டிராத சிறந்த தலைவர். 60 ஆண்டுகளில் நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், இப்போது மோடியை முழு மனதுடன் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவரின் நிர்வாகத்தை கவனித்து வருகிறேன்.
இதுவரை மோடிக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரதமராக அவரின் திறமையான நிர்வாகம், திருப்திகரமாக உள்ளது. நான், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் மோடி செய்த அற்புதங்களை செய்துள்ளோம்.
மானசரோவரில் பிறந்து ஓடிய புனித கங்கை மாசுபட்டது. கங்கையை சுத்தப்படுத்த திட்டம் வகுத்தார். சில ஆண்டுகளில் கங்கை துாய்மையானது. இப்போது கங்கை துாய்மையாக பாய்கிறாள். இதற்கு மோடியின் துாய்மையான மனது தான் காரணம்.
பிரதமராக இருந்தாலும்,கேசர்நாத், சோம்நாத்தில் மோடி பிரார்த்தனை செய்கிறார். குஜராத்தில் பிறந்த அவர், வாரணாசியை தனது தொகுதியாக தேர்வு செய்தார். காசிக்கு புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். இவ்விஷயத்தில், நான் பொய் சொல்ல மாட்டேன். மோடி ஒரு சிறந்த மனிதர். பண்பட்ட மனிதர் என்றால் என்ன என்பதை நான் மிக நெருக்கமாக பார்த்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன், நான் அவரை சந்தித்தபோது, என்னை மரியாதையுடன் அணுகி, என் கையை பிடித்து நாற்காலியில் அமர வைத்தார். இப்படிப்பட்ட மகத்துவத்தை யாரிடமும் கண்டதில்லை.
அவர் தெய்வீகமானவர். 11 நாட்கள் உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். அரசியலுக்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது.
ராமர் கோவில் தொடர்பாக என்ன சர்ச்சை இருந்தாலும், ஹிந்து - முஸ்லிம் மோதல்கள் எதுவாக இருந்தாலும் சரி. அவற்றை பற்றி பேசமாட்டேன். அவற்றையெல்லாம் தாண்டி, அமைதியான முறையில் ராமர் கோவில் கட்டுவது எளிதான காரியம் அல்ல.
வெகு சிலரே மோடியை எதிர்க்க முடியும். நாட்டு மக்கள், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டது, மிகப்பெரிய சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.