பட்டாசு ஆலையில் விபத்து; ஆந்திராவில் எட்டு பேர் பலி
பட்டாசு ஆலையில் விபத்து; ஆந்திராவில் எட்டு பேர் பலி
ADDED : ஏப் 14, 2025 04:01 AM

விசாகப்பட்டினம்; ஆந்திராவில் அனகாபள்ளி மாவட்டத்தின் கைலாசாவில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு, பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் நேற்று ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது.
அங்கு, பணியாற்றி வந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் அங்கு சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில், இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக, சம்பவ இடத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனிதா, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்ததுடன், வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

