மதம் மாற வற்புறுத்தி கொலை மிரட்டல் சங்கூர் பாபா மீது குவியும் புகார்
மதம் மாற வற்புறுத்தி கொலை மிரட்டல் சங்கூர் பாபா மீது குவியும் புகார்
ADDED : ஜூலை 24, 2025 12:58 AM

பதோஹி: 'முஸ்லிம் மதத்துக்கு மாறாவிட்டால், மகள்களை கொன்றுவிடுவேன்' என, மிரட்டியதாக, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட மதமாற்ற செயலுக்கான முக்கிய குற்றவாளி சங்கூர் பாபா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் மாதம்பூரைச் சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
சண்டை இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தது தெரியவந்தது. குறிப்பாக ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், கணவரை இழந்த பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி அளித்தும், மிரட்டல் விடுத்தும், இருவரும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ஜியோதிர்க் மே என்பவர் சங்கூர் பாபா மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஹிந்து அமைப்பான, 'ஆர்ய சமாஜ்' இயக்கத்தின் வாயிலாக, இஷிதா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னரே, அவர் ஹிந்து அல்ல முஸ்லிம் என்பதும், அவர் பெயர் அப்ரீன் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக எங்களிடையே அடிக்கடி சண்டை வந்தது. இதற்கிடையே, மனைவியின் குடும்பத்தினர் என்னை முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தினர். இதை ஏற்காததை அடுத்து, கடந்தாண்டு என் இரு மகள்களுடன், மனைவி லக்னோ சென்றார். நானும், அவர்களுடன் சென்றேன்.
விசாரணை அப்போது, சங்கூர் பாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் என்னை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினர். ஒரு கட்டத்தில், என் மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி என்னை மதம் மாற வற்புறுத்தினர். கடந்த டிசம்பர் முதல் ஏப்ரல் வரை லக்னோவில் இருந்த நான், மதம் மாறாமல் பதோஹி திரும்பிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜியோதிர்க் மேவின் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது குறித்து சங்கூர் பாபாவிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, தன் மகள்களை தனது பொறுப்பில் வளர்க்க அனுமதி தரும்படி உயர் நீதிமன்றத்தில் ஜியோதிர்க் மனுத் தாக்கல் செய்துள்ளார்.