கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு; டில்லியில் அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு; டில்லியில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : அக் 26, 2025 10:13 PM

புதுடில்லி: டில்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் விஹார் பகுதியில் நடந்து சென்ற இளம்பெண் மீது அவரைப் பின் தொடர்ந்து வந்த நபரும், அவரது நண்பர்களும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண்ணின் கைகளில் பயங்கர தீக்காயம் ஏற்பட்டது.
ஆசிட் வீச்சுக்கு ஆளான மாணவி தனியார் கல்வி நிறுவனத்தில் 2ம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பிற்காக மாணவி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஜிதேந்தர் என்பவன் மாணவியை பின் தொடர்ந்து வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது நண்பர்கள் இஷான் மற்றும் அர்மான் ஆகியோருடன் பைக்கில் வந்து, மாணவி மீது ஆசிட்டை ஜிதேந்தர் வீசியுள்ளார்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மூவரையும் தேடி வருகின்றனர்.

