ஆசிட் வீச்சு குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
ஆசிட் வீச்சு குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
ADDED : ஜன 28, 2026 07:38 AM

புதுடில்லி: 'பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டில்லியை சேர்ந்த ஷாஹீன் மாலிக் என்ற பெண் மீது கடந்த 2009ல் ஆசிட் வீசப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஆசிட் வீசியவர்களை டில்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து ஷாஹீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான ஷாஹீன் மாலிக், 'என் வாழ்க்கையின் 16 ஆண்டுகளை சட்டப் போராட்டத்திற்காக செலவிட்டுள்ளேன். இறுதியில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். கடைசி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன். எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆசிட் வீச்சு சம்பவங்கள் குறித்த ஆண்டு வாரியான தரவுகள், குற்றப்பத்திரிகை தாக்கல், விசாரணை அறிக்கை மற்றும் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளின் நிலை, பாதிக்கப்பட்டவரின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண நிலை, மருத்துவ சிகிச்சை மற்றும் மாநிலத்தால் செய்யப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட செலவுகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக வழங்குவது குறித்து இந்த நீதிமன்றம் ஆலோசிக்கிறது.
ஆசிட் வீச்சு பாதிப்பு என்பது வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு இணையானது. எனவே அதற்கு ஈடான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

