ADDED : நவ 07, 2024 12:36 AM
பெங்களூரு: லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி.,யை மிரட்டியதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பதிவான வழக்கில், அவர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது என்று, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர். இவருக்கும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமிக்கும் இடையில், கடந்த இரு மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டியதாக சந்திரசேகர் அளித்த புகாரில், பெங்களூரு சஞ்சய் நகர் போலீசார் குமாரசாமி, அவரது மகன் நிகில், எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.
தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் குமாரசாமி தரப்பில் அவரது வக்கீல் ஹஸ்மத் பாஷா மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்தார். நேற்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'குமாரசாமி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது' என்று, மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றம் அதிருப்தி
இதற்கிடையில், 2006ல், குமாரசாமி முதல்வராக இருந்த போது, பெங்களூரு, பனசங்கரி 5வது ஸ்டேஜின், ஹலகேவடேரஹள்ளியில், 3.34 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக நில மறு அறிவிப்பு செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் ஆபிரஹாம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி, குமாரசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று அவர் ஆஜராகாததால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 'விசாரணைக்கு ஆஜராகாமல், அவ்வப்போது கால அவகாசம் கேட்கிறீர்கள். இன்னும் எத்தனை முறைதான் உங்களுக்கு கால அவகாசம் அளிப்பது' என, நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.