ஊர் பெயர்களை தமிழில் எழுதாத தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை
ஊர் பெயர்களை தமிழில் எழுதாத தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜூலை 17, 2025 09:20 PM

பாலக்காடு; பாலக்காடு மாவட்டத்தில், தமிழக எல்லையோர வழித்தடத்தில், ஊர் பெயர்களை தமிழில் எழுதாத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கேரள - -தமிழக எல்லையோர கிராமங்களில், தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் நலன் கருதி, இரு மாநிலங்கள் இடையே இயங்கக்கூடிய பஸ்களில், தமிழ் மொழியில் ஊர் பெயர்கள் இடம் பெற்றால் கிராம மக்கள் பயனடைவர்.
இதையடுத்து, பாலக்காடு மாவட்டத்தில் தமிழ் மொழி சிறுபான்மையினர் வசிக்கின்ற பகுதிகளில் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஊர் பெயர்களை தமிழிலும் எழுத வேண்டும் என, கேரள மாநில போக்குவரத்து துறை அறிவித்தது.
அதன்படி, ஊர் பெயர்களை தமிழில் எழுதாத தனியார் பஸ்கள் மீது, மோட்டார் வாகன துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் எல்லையோர சோதனை சாவடிகளான ஆனைக்கட்டி, வாளையார், நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், செம்மணாம்பதி, முள்ளி ஆகிய இடங்களில் அதிகாரிகள், தனியார் பஸ்களை நிறுத்தி தமிழில் எழுதிய பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

