விதிகளை மீறிய ரோஹிணி மீது நடவடிக்கை ம.ஜ.த.,வின் சா.ரா.மகேஷ் வலியுறுத்தல்
விதிகளை மீறிய ரோஹிணி மீது நடவடிக்கை ம.ஜ.த.,வின் சா.ரா.மகேஷ் வலியுறுத்தல்
ADDED : டிச 01, 2024 11:17 PM

மைசூரு: ''ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரி மீது, பல ஊழல் புகார்கள் இருந்தும், அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வான சா.ரா.மகேஷ் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக, மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஐ.ஏ.எஸ்., ரோஹிணி சிந்துாரியின், சட்டவிரோத செயல்கள் தொடர்பான வழக்கின் விசாரணையை, திசை மாற்ற முயற்சி நடக்கிறது.
இது தொடர்பாக, கேள்வி எழுப்பி நீதிமன்றத்தில் முறையிடுவேன். எனக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. நான் மவுனமாக இருப்பதை, என் பலவீனமாக கருத கூடாது.
விசாரணையை திசை மாற்றுவதன் பின்னணியில் இருப்பது யார். இந்த உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2021 மே 9ம் தேதியன்று, அன்றைய முதல்வருக்கு கடிதம் எழுதி, ரோஹிணி சிந்துாரியின் முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தினேன். 2022 மே 17ல், அரசு கமிட்டி அமைத்தது. விசாரணை அதிகாரியாக தலைமை செயலர் ஜெயராம் நியமிக்கப்பட்டார்.
இவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, விசாரணை அதிகாரி இடத்தில் இருந்து மாற்றி, ஜூன் 1ல் வீட்டு வசதித்துறை செயலர் ரவிசங்கர், புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
திருமலையில் கர்நாடக பவன் கட்ட, விதிமீறலாக 10 கோடி ரூபாய் வழங்கினார். கொரோனா நேரத்தில், சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு, ஆக்சிஜன் அனுப்ப மறுத்து, 32 கொரோனா நோயாளிகள் இறக்க காரணமாக இருந்தார். தன் அரசு இல்லத்தில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நவீன பணிகளை நடத்தினார். நீச்சல் குளம் அமைத்தார். இது போன்ற பல குற்றச்சாட்டுகள் ரோஹிணி மீது உள்ளன.
பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக கூறி, பொதுமக்களுக்கு துணிப்பைகள் வாங்கி வழங்கினார். ஆறு ரூபாய் விலையுள்ள ஒரு துணிப்பைக்கு, 48 ரூபாய் கொடுத்தார். மாவட்ட கலெக்டர் அளவிலான பணிகளுக்கு, 2.5 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முடியும். ஆனால், இவர் 8.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து சட்டசபையிலேயே விவரித்தேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.