ADDED : பிப் 13, 2024 06:50 AM

கோலார்: ம.ஜ.த.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைய உள்ளதாக கூறிய காங்., - எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில்குமார் ஆகியோர் கூறியதற்கு, கட்சியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்தந்த கட்சிகளில் சீட் பெறும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்சித்தாவல் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பிற கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் வலை விரித்துள்ளது.
இந்த நிலையில், கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில்குமார் ஆகியோர் கூறுகையில், 'ம.ஜ.த.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளனர்' என்றனர். இதற்கு கட்சி தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கோலார் மாவட்ட காங்., தலைவர் லட்சுமி நாராயணா கூறியதாவது:
ம.ஜ.த., உட்பட எந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்களையும், காங்கிரசுக்கு அழைத்து வருவது குறித்து, ஆலோசனை நடக்கவில்லை. வேறு யாரோ ஒருவரின் தோளில் துப்பாக்கி வைத்து சுடும் முயற்சி இது.
மற்ற கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைந்தால் என் கவனத்துக்கு வந்திருக்கும். எங்களிடம் மாநில தலைவர் கூறியிருப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை. வேறு கட்சியின் தலைவர்கள், காங்கிரசுக்கு தேவை இல்லை.
அன்போடு வருவதானால் வரவேற்கிறோம். கொத்துார் மஞ்சுநாத்தும், அனில்குமாரும் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர்.
கட்சியை வெற்றி பெற வைப்பவர்கள், தொண்டர்கள் தானே தவிர, தலைவர்கள் அல்ல. யாரும் கட்சியின் இமேஜுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேலையை செய்யக் கூடாது. கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில், யாரும் பேசக் கூடாது.
எதிர்க் கட்சியினரின் விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடாது. கட்சிக்கு பாதிப்பு வரும்படி பேசுவோர், யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.