இளைஞர்களே குட் நியூஸ்; அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்; மத்திய அரசு முடிவு
இளைஞர்களே குட் நியூஸ்; அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்; மத்திய அரசு முடிவு
ADDED : செப் 05, 2024 11:25 AM

டில்லி: அக்னிபாத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்னிபாத்
ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம்.
25 சதவீதம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே முப்படைகளில் பணியாற்ற தக்க வைக்கப்படுவர். எஞ்சிய 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். இந்த திட்டத்தில் சேவை நிதி, இழப்பீடு, இன்சுரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
எதிர்ப்பு
மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, ஆரம்ப நிலையில் இருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முடிவு
இந்த நிலையில், எதிர்கட்சிகளின் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கும் விதமாக, அக்னிபாத் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிப்பு
இது தொடர்பாக சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அக்னிபாத் திட்டத்தின் கீழ் தற்போது வரை 25 சதவீதம் வீரர்களே தக்க வைக்கப்படுகிறார்கள். இது ரொம்ப குறைவு என்பதால், இனி 50 சதவீத வீரர்களை தக்க வைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வீரர்களுக்கான ஊதியம் மற்றும் வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம், என தெரிவித்துள்ளார்.