பயிர்க்கழிவு எரிப்புக்கான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்!
பயிர்க்கழிவு எரிப்புக்கான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்!
UPDATED : அக் 24, 2024 05:26 AM
ADDED : அக் 24, 2024 03:06 AM

புதுடில்லி புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர்க்கழிவு எரிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்காததற்காக, மத்திய மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துவதாகவும், அரசியல் காரணங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
உலக அளவில் அதிக மாசுள்ள நகரங்களில் இரண்டாவது இடத்தில் டில்லி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் துவங்குவதற்கு முன், அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்டவற்றில், விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதே, டில்லியின் மோசமான காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதைத் தடுக்கும் வகையில், சி.ஏ.க்யூ.எம்., எனப்படும் காற்று தர நிர்வாக கமிஷன், 2021, ஜூன், 10ல் பல உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
மெத்தனம்
இருப்பினும், டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான கட்டத்தில் தற்போது உள்ளது. இது தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் அபய் ஓகா, அசானுதீன் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையின்போது, பயிர்க்கழிவு எரிப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முறையான தகவல்களை அளிக்காததால், ஹரியானா மற்றும் பஞ்சாபின் தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இரு மாநில தலைமைச் செயலர்களும் நேற்று விசாரணையின்போது ஆஜராயினர். விசாரணையின்போது, இரு மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும், குறிப்பாக, பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகவும், அபராதம் விதிப்பதில் ஒருதலைபட்சமாகவும், மெத்தனமாகவும் செயல்படுவதாகவும் அமர்வு கடுமையுடன் குறிப்பிட்டது.
விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. பஞ்சாப், ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே டில்லி காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு காரணம். ஆனால், இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின், 15வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டது. முன்பு தண்டனை விதிக்கப்பட்ட பிரிவுகள் மாற்றப்பட்டு, வெறும் அபராதம் மட்டும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக இந்தச் சட்டப் பிரிவின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன.
வழக்குப்பதிவு
இதைத் தவிர, மிகவும் குறைந்த அளவுக்கே அபராதம் விதிக்கப்படுகிறது. பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபட்டால், 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக விவசாயிகள் முறையிட்டால், அந்த அபராதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது; நீங்கள் பயிர்க்கழிவுகளை எரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு சலுகை அளிப்பதாகவே சட்டத் திருத்தம் உள்ளது.
இதைத் தவிர, இந்த அபராதம் விதிப்பதும், பயிர்க் கழிவு எரிப்பதை கண்காணிக்கவும் உரிய அமைப்புகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், போலீஸ் மற்றும் அரசு அமைப்புகள் உள்ளன.
அதிலும், ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கின்றனர். மற்றவர்கள் தப்பிக்க விடப்படுகின்றனர். போலீசில் மிகவும் குறைந்த அளவுக்கே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பயிர்க்கழிவு எரிக்கும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, மாநில அரசுகள் கூறியுள்ளன. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அதுவாக எப்படி குறையும்? அரசுகளின் இந்த நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே உள்ளன. இந்த விஷயத்தில் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
சும்மா விடமாட்டோம்
அரசியல் காரணங்களுக்காக, விவசாயிகளுக்கு பெரிய அளவில் சலுகைகளை அளிக்கிறீர்கள். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றி உங்களுக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை.
அடுத்த, 10 நாட்களுக்குள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை இறுதி செய்வதாகவும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால், மத்திய அரசை நாங்கள் சும்மா விடமாட்டோம். சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும், அதை செயல்படுத்த உரிய அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணை, நவ., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.