'பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் நடவடிக்கை'
'பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் நடவடிக்கை'
ADDED : நவ 03, 2024 11:32 PM
ராம்நகர்; ''சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியரை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால், வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ராம்நகர் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஜனி தெரிவித்தார்.
கர்நாடகாவில் சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் - தனி தொகுதிகளுக்கு வரும் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
மூன்று தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தில் சிறுவர் - சிறுமியர் கட்சி கொடிகளை பிடித்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆனால், இதை கண்டிக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, மாநில தேர்தல் ஆணயைத்துக்கு புகார் சென்றது.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி ரஜனி கூறியதாவது:
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் நடத்தும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சிறுவர் - சிறுமியரை பயன்படுத்த கூடாது.
அவர்களை ஊர்வலமோ, வாகன ஊர்வலத்திலோ அழைத்து செல்லக்கூடாது. ஊர்வலத்தில் நோட்டீஸ் வினியோகிக்கவும்; வாழ்த்து கோஷம் எழுப்பவும் குழந்தைகளை சில கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.
ஒருவேளை வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களோ சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள் உரிமை மற்றும் சிறார் திருத்த சட்டத்தின்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகளே.
எனவே, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த வகை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவது குற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.