இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை: தேர்தல் கமிஷனர்களுக்கு ராகுல் எச்சரிக்கை
இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை: தேர்தல் கமிஷனர்களுக்கு ராகுல் எச்சரிக்கை
ADDED : ஆக 18, 2025 10:09 PM

பாட்னா: மத்தியிலும், பீஹாரிலும் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேர்தல் கமிஷனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
பீஹாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை துவக்கியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் கயாஜி என்ற இடத்தில் பேசியதாவது: நீங்கள் ஓட்டுத் திருட்டை அனுமதிப்பீர்களா? பல ஆண்டுகளாக தேர்தல் குறித்து சந்தேகம் இருந்தது. மஹாராஷ்டிரா தேர்தலில் அது தெளிவாகியது. அங்கு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு இடையே 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். நாங்கள் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றோம். ஆனால் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. அதேநேரத்தில் எங்களது ஓட்டு குறையவில்லை.
ஆனால், ஓட்டுகள் சேர்க்கப்பட்ட இடங்களில் எல்லாம் பாஜ வெற்றி பெற்றது. ஐந்து வழிகளில் ஓட்டுத் திருடப்படுகிறது என தேர்தல் கமிஷனிடம் நான் தெரிவித்தேன். தெளிவாக கூறியும் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யவில்லை. ஆனால், எங்களிடம் சத்தியப் பிரமாணம் கேட்கின்றனர். இதற்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கின்றனர். உங்களிடம் இருந்து மக்கள் சத்தியப் பிரமாணம் கேட்பார்கள் என்பதை தேர்தல் கமிஷனர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் தீவிரப் பணிகள் மூலம் ஓட்டுகளை திருட முயற்சிக்கின்றனர். இதனை பீஹார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் பொய் பேச மாட்டேன் என்பதும் உங்களுக்கு தெரியும். தேர்தல் கமிஷனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தற்போது பிரதமர் மோடி அதிகாரத்தில் இருக்கலாம். தேஜஸ்வி கூறியது போல், நீங்கள் பாஜ உறுப்பினர் அட்டை வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்கள். ஒரு நாள் மத்தியிலும் பீஹாரிலும் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.