பலாத்கார வழக்கில் அதிரடி: எம்.எல்.ஏ., முனிரத்னா கைது
பலாத்கார வழக்கில் அதிரடி: எம்.எல்.ஏ., முனிரத்னா கைது
ADDED : செப் 21, 2024 07:04 AM

பெங்களூரு: பலாத்கார வழக்கில் பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னா நேற்று கைது செய்யப்பட்டார். பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் அவரை, ககலிபுரா போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சலுவ ராஜு, முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கர் ஆகியோரை, அவர்களின் சமூகத்தை சொல்லி திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு இரண்டு வழக்கிலும் ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு, ராம்நகரின் ககலிபுரா போலீஸ் நிலையத்தில் முனிரத்னா மீது, 40 வயது பெண் பலாத்கார புகார் செய்தார். அதன்படி, முனிரத்னா உட்பட ஏழு பேர் மீது பலாத்கார வழக்கு பதிவானது.
இந்நிலையில் ஒப்பந்ததாரர், முன்னாள் கவுன்சிலரை திட்டிய வழக்கில் கிடைத்த ஜாமினில், நேற்று காலை சிறையில் இருந்து, முனிரத்னா வெளியே வந்தார். சிறை வாசலில் காத்திருந்த ககலிபுரா போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீஸ் ஜீப்பில், ககலிபுரா அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
பின் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம், ராம்நகர் டி.எஸ்.பி., தினகர் ஷெட்டி விசாரணை நடத்தினார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முனிரத்னா மவுனமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ஒக்கலிகா சமூகம் குறித்து பேசிய முனிரத்னாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து, ஒக்கலிகா சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர்.
நேற்று காலை, வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தலைமையில் முதல்வரை சந்தித்த ஒக்கலிகா சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா வழக்கை எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.