தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஐ.சி.யு., சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்த  செயல் திட்டம்!: போர்க்கால அடிப்படையில் தயாரிக்கும்படி கோர்ட் உத்தரவு

ஐ.சி.யு., சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்த  செயல் திட்டம்!: போர்க்கால அடிப்படையில் தயாரிக்கும்படி கோர்ட் உத்தரவு

ஐ.சி.யு., சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்த  செயல் திட்டம்!: போர்க்கால அடிப்படையில் தயாரிக்கும்படி கோர்ட் உத்தரவு


ADDED : ஏப் 26, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -:

நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில், ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்த, போர்க்கால அடிப்படையில் செயல் திட்டத்தை தயாரிக்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் வழங்கப்படும் சிகிச்சைகள், அங்கு அவசியம் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தரம் ஆகியவை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, நீதிபதிகள் அசானுதீன் அமனுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 20ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ நிபுணர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன், முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அதில், 'தீவிர சிகிச்சை பிரிவில் சரிபார்ப்பு பட்டியல்கள் இடம் பெற வேண்டும். நோயாளியின் உடல்நிலை மற்றும் அவசர நிலையை பொறுத்து, ஜி.பி.எஸ்., அடிப்படையில் அருகில் உள்ள மருத்துவமனைகளை கண்டறியும் வசதி உருவாக்கப்பட வேண்டும்.

'மருத்துவ உபகரணங்களை திறமையாக கையாள, மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்' என்பன உள்ளிட்ட சில ஆலோசனைகள் இடம் பெற்றிருந்தன.

இதை உச்ச நீதிமன்றம் தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் அசானுதீன் அமனுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

l அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை செயலர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, ஒரு வாரத்திற்குள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அப்போது, ஐ.சி.யு., வழிகாட்டுதல்களுக்கான தரநிலை செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்

l மனிதவளம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகளில் எவை மிக அவசியமானது என்பதை அடை யாளம் கண்டு, முதல் கட்டமாக ஐந்து முக்கிய முன்னுரிமை பணிகளை பட்டியலிட வேண்டும்

l மருத்துவர்களை விட, செவிலியர்களே, 24 மணி நேரமும் நோயாளிகளுடன் உள்ளனர். எனவே, ஐ.சி.யு., சூழலை கையாள செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குவது அவசியம். இதற்காக, இந்திய செவிலியர் கவுன்சில் மற்றும் இந்திய துணை மருத்துவ கவுன்சில் ஆகியவற்றை இவ்வழக்கில் எதிர்வாதிகளாக சேர்க்க வேண்டும்

l தீவிர சிகிச்சை பிரிவுகளில் தரமற்ற சிகிச்சை அளிக்கப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மிக முக்கியமானதாது

l மத்திய சுகாதாரத் துறை இந்த உத்தரவுகளை உடனடியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்து, தன் இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும்

l மாநில அரசுகள் முதற்கட்ட கூட்டத்தை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடித்து, இறுதி வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

l மாநில அரசுகள் அளிக்கும் வரைவு அறிக்கையின் அடிப்படையில், மத்திய சுகாதாரத் துறை மூன்று வாரங்களுக்குள் நாடு தழுவிய ஒரு பொதுவான வழிகாட்டுதலை தயார் செய்து, அதை அடுத்த விசாரணை தேதியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

l விதிகள் காகித அளவில் மட்டும் இல்லாமல், அவை களத்தில் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, வலுவான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்

l மேலும், இந்த விவகாரத்தில் ஏதேனும் யோசனைகள் இருந்தால், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரிடம் மருத்துவ நிபுணர்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுகள், உயிர் காக்கும் பணியில் பெயரளவுக்கு இல்லாமல், தரமாக இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கம் என உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us