ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை: நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவு
ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை: நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவு
ADDED : மே 23, 2025 12:52 AM

புதுடில்லி: நெடுஞ்சாலைகளை ஒட்டிய நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் மற்றும் போக்குவரத்து சட்ட விதிகளை செயல்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வழிகாட்டுதல்களை வெளியிடக் கோரி, கியான் பிரகாஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
1 நெடுஞ்சாலை நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது தொடர்பான புகார்களை பெறுவதற்கான இணையதள 'போர்ட்டல்'களை ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.
2ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், உள்ளூர் போலீசார் அல்லது பிற படைகளை உடைய கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த கண்காணிப்பு குழுக்கள் கடமை தவறாமல், சரியான நேரத்தில் ரோந்து சென்று ஆக்கிரமிப்புகளை தடுப்பதை கண்காணிப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
3தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு விரிவான தகவல்களையும், புகார் தீர்வுகளையும் வழங்குவதை நோக்கமாக கொண்ட ஆணையத்தின் 'ராஜ்மார்க்யாத்ரா' மொபைல் செயலி குறித்து, ஊடகங்களில் பெரியளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
4நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், உணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த செயலி குறித்த தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். ராஜ்மார்க்யாத்ரா செயலியில் பதிவாகும் புகார்களை, நெடுஞ்சாலைகள் இணை செயலர் கண்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.