தண்ணீர் டேங்கர்களுக்கு கட்டணம் நிர்ணயம் அதிக தொகை வசூலிப்பதை தடுக்க அதிரடி
தண்ணீர் டேங்கர்களுக்கு கட்டணம் நிர்ணயம் அதிக தொகை வசூலிப்பதை தடுக்க அதிரடி
ADDED : மார் 08, 2024 02:14 AM
பெங்களூரு: அதிக தொகை வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், தண்ணீர் டேங்கர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்தா உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாததால், நீர் நிலைகள் வறண்டுள்ளன. இதனால், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கும், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், வாரத்தில் மூன்று நாட்கள் வினியோகித்து வந்த காவிரி நீர், தற்போது, வாரத்துக்கு ஒரு நாள் தான் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் குடிப்பதற்கும் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர்.
குடிசை வாழ் பகுதி முதல், அடுக்குமாடி குடியிருப்பு வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு விட்டன.
பெரும்பாலான மக்கள், டேங்கர்கள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். தட்டுப்பாட்டை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இரட்டிப்பு கட்டணத்தை, டேங்கர் உரிமையாளர்கள் வசூலித்து வருகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், தண்ணீர் வினியோகிக்கும் டேங்கர்களுக்கு, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்தா, கட்டணம் நிர்ணயித்து நேற்று உத்தரவிட்டார்.
உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:
6,000 லிட்டர் டேங்கருக்கு, 5 கி.மீ., துாரத்துக்குள் 600 ரூபாய்; 10 கி.மீ., துாரத்துக்குள் 750 ரூபாய்
8,000 லிட்டர் டேங்கருக்கு, 5 கி.மீ., துாரத்துக்குள் 700 ரூபாய்; 10 கி.மீ., துாரத்துக்குள் 850 ரூபாய்
10,000 லிட்டர் டேங்கருக்கு, 5 கி.மீ., துாரத்துக்குள் 1,000 ரூபாய்; 10 கி.மீ., துாரத்துக்குள் 1,200 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மாத கணக்கில் ஒப்பந்தம் போட்டு கொள்பவர்களுக்கு, 5 கி.மீ., துாரத்துக்குள் 510 ரூபாயும்; 10 கி.மீ., துாரத்துக்குள் 650 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

