இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் நடவடிக்கை; பார்லி., முடங்கிய கோபத்தில் ஓம்பிர்லா கடும் எச்சரிக்கை!
இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் நடவடிக்கை; பார்லி., முடங்கிய கோபத்தில் ஓம்பிர்லா கடும் எச்சரிக்கை!
ADDED : ஜூலை 23, 2025 09:53 PM

புதுடில்லி: உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திச் செல்லக்கூடாது. இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால், நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கூடிய முதல் நாளில் இருந்தே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தொடர்ந்து மூன்றாவது நாளாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது. லோக்சபாவில் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பதற்காக, நீங்கள் செயல்பட வேண்டும். நீங்கள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.
ஆனால் நீங்கள் பார்லிமென்டில் தெருமுனையில் நடப்பதை போல் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திச் செல்லக்கூடாது. இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால், நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் லோக்சபாவை நாளை காலை 11:00 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.