ADDED : பிப் 17, 2024 11:36 PM

பெங்களூரு, : அரசியலுக்கு வரும்படி, நடிகர் டாலி தனஞ்ஜெய்க்கு, காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரசில் அவரை இணைத்து, லோக்சபா தேர்தலில் முக்கிய தொகுதியில் களமிறக்க முயற்சி நடந்து வருகிறது.
கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருப்பவர் டாலி தனஞ்ஜெய், 37. ஹாசன் மாவட்டம், அரிசிகெரேயைச் சேர்ந்தவர். கர்நாடகா அரசின் 'லிட்கர்' எனும் தோல் வளர்ச்சிக் கழகத்தின் அம்பாசிடராக உள்ளார். முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்களுடன் சிலருடன், டாலி தனஞ்ஜெய்க்கு நல்ல உறவு உள்ளது.
இந்நிலையில், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், சமீபத்தில் டாலி தனஞ்ஜெயிடம், அரசியலுக்கு வரும்படியும், காங்கிரசில் இணையும்படியும் பேச்சு நடத்தி உள்ளார். “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். யோசித்து கூறுகிறேன்,” என, டாலி தனஞ்ஜெய் கூறி உள்ளார்.
ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்து, காங்கிரசில் இணைந்தால் லோக்சபா தேர்தலில், முக்கிய தொகுதியில் அவரை களமிறக்கவும் முயற்சி நடந்து வருகிறது. டாலி தனஞ்ஜெய் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் போட்டியிட்டால் லிங்காயத், குருபா ஓட்டுகளை எளிதில் பெறலாம் என்பதும், காங்கிரஸ் கணக்காக உள்ளது.