கன்னட மொழிக்கு எதிராக பேச நடிகர் கமலுக்கு இடைக்கால தடை
கன்னட மொழிக்கு எதிராக பேச நடிகர் கமலுக்கு இடைக்கால தடை
UPDATED : ஜூலை 06, 2025 12:57 AM
ADDED : ஜூலை 06, 2025 12:31 AM

பெங்களூரு:'கன்னட மொழிக்கு எதிராக இனி நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவிக்கக் கூடாது' என, சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து.
நடிகர் கமல் நடித்த தக் லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
'மன்னிப்பு கேட்டால் தான் திரைப்படத்தை திரையிட அனுமதிப்போம்' என, கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும், அவரின் படத்துக்கு தடை விதித்தது.
கமலின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. ஆனால், தன் கருத்தில் கமல் உறுதியாக இருந்தார். இறுதியில் படத்தை திரையிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கமலின் பேச்சுக்கு எதிராக, கன்னட சாகித்ய அகாடமி சார்பில் அதன் தலைவர் நாடோஜா மகேஷ் ஜோஷி, சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி மது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நடிகர் கமல், அவரின் ஏஜென்டுகள், பிரதிநிதிகள் அல்லது அவரின் கீழ் நடிக்கும் எந்தவொரு நபரும், கன்னட மொழி குறித்து அறிக்கையோ, விமர்சனம் வெளியிடவோ, எழுதவோ அல்லது கன்னட மொழி, இலக்கியம், நிலம், கலாசாரத்தை புண்படுத்தும் வகையில் அவதுாறு பரப்பும் அறிக்கை வெளியிடக்கூடாது என்று இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கு விசாரணை, ஆக., 30ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில்
குறிப்பிட்டு உள்ளது.

