நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:47 AM

திறமைக்கு வாய்ப்பு
காந்தாரா திரைப்படம் வெளியாகி, சக்கை போடு போட்ட பின், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடிப்பு மற்றும் இயக்கத்துடன் அவர் நிற்கவில்லை. பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். திறமை உள்ள புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், படம் தயாரிக்க ஆர்வம் காண்பிக்கிறார். அவரது தயாரிப்பில், சிவம்மா திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இந்த படம் பெரும்பாலான சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை தட்டி சென்றது. ஜூன் 14ல் திரையிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் சரணம்மா செட்டி, நாயகியாக நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ஜெய்சங்கர், ஐ.டி., தொழிலை விட்டு விட்டு திரையுலகுக்கு வந்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்...
நடிகை பாவனா மேனனை, கன்னட படங்களில் பார்த்து நீண்ட நாளாகிறதே என, வருந்தும் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. நடிகர்கள் சிவராஜ்குமார், தனஞ்செயா நடிக்கும் உத்தகாண்டா படத்தில், பாவனா நாயகியாக நடிக்கிறார். இது, சிவராஜ்குமாருடன் ஜோடி சேரும் மூன்றாவது படமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்காயணா ரகு, சைத்ரா ஆச்சார், உமாஸ்ரீ என, நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜயபுரா, பெலகாவியில் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் வீரவ்வா என்ற கதாபாத்திரத்தில், பாவனா நடிக்கிறார்.
குடும்பத்தினரை மதிக்காமல்...
குடகை சேர்ந்த மற்றொரு நடிகை, கன்னட திரையுலகுக்கு வந்துள்ளார். மோக்ஷா குஷால், எலக்ட்ரானிக் பொறியியல் பட்டம் பெற்றவர். ஹிந்தி தொடர்களில் நடித்த இவர், மாடலிங்கிலும் ஈடுபடுகிறார். தற்போது கன்னட திரையுலகில் வாய்ப்புகளை பெறுகிறார். இவர் நடிகையாவதை குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் அதை பொருட்படுத்தாமல், நடிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது கோடி என்ற படத்தில் நடிக்கிறார். குறும்புத்தனம் நிறைந்த சூட்டிகையான பெண்ணாக மோக்ஷா தோன்றுகிறார். இயக்குனர் இவரை கிளாமர் பொம்மையாக இல்லாமல், இவரது நடிப்பு திறனை வெளி கொணர்ந்து உள்ளார். இவருக்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது கனவு.
அனிமேஷனில் டீசர்
பட துணுக்குகளை வைத்து, டீசர் தயாரிப்பது வழக்கம். ஆனால் பேங்க் ஆப் பாக்கியலட்சுமி படக்குழுவினர், அனிமேஷனில் டீசர் தயாரித்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளனர். கன்னடம், தெலுங்கில் வெளியாக உள்ள படத்தின் சாராம்சத்தை, அனிமேஷன் வடிவில் கொண்டு வந்துள்ளனர். கன்னட திரையுலகில் இது ஒரு புதிய முயற்சியாகும். பெங்களூரு, துமகூரு, சித்ரதுர்காவில் படப்பிடிப்பு நடத்தினர். இன்னும் சில நாட்களில், படப்பிடிப்பு முடிகிறது. இதில் பிருந்தா ஆச்சார்யா, நாயகியாக நடித்துள்ளார்.
வெற்றி வேண்டுமா?
பெரும்பாலும் புதியவர்களே நடிக்கும், 'சில்லி சிக்கன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வட மாநிலத்தில் இருந்து, பிழைப்பு தேடி பெங்களூரு வரும் நான்கு இளைஞர்கள், சைனீஸ் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றுகின்றனர். தாங்களே சொந்தமாக ஹோட்டல் திறக்க விரும்புகின்றனர். ஆனால் எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்று, இவர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இறுதியில் இளைஞர்கள் தங்கள் முயற்சியில், வெற்றி பெறுகின்றனரா, இல்லையா என்பதே படத்தின் சாராம்சம். தீப் பீமஜியானி மற்றும் சுதா நம்பியார் தயாரித்துள்ள இந்த படத்தை, பிரதீக் பிரஜோஷ் இயக்குகிறார்.
குடும்ப கதை
கணேஷ் நடிப்பில் 41வது படமான, கிருஷ்ணம் பிரணய சகி படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அர்ஜுன் ஜன்யா இசை அமைத்த பாடல் வெளியாகி, ரசிகர்களை ஈர்த்துள்ளது. நடப்பாண்டு மார்ச்சில் படப்பிடிப்பு முடிந்தது. பெங்களூரு, வியட்னாம் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடும்ப கதை. இதில் கணேஷுக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடித்துள்ளார். சரண்யா ஷெட்டி, சீனிவாச மூர்த்தி, சாது கோகிலா உட்பட பலர் நடித்துள்ளனர்.