ADDED : மார் 16, 2024 11:01 PM

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கு, நடிகர் சாது கோகிலா, காங்கிரஸ் 'சீட்' எதிர்பார்க்கிறார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதற்காகவே காத்திருந்த அரசியல் கட்சிகள், மேலும் சுறுசுறுப்புடன் செயல்பட துவங்கி உள்ளன; பிரசார திட்டங்களை வகுக்கின்றன.
எதிர்க்கட்சியான பா.ஜ., கர்நாடகாவின் 20 தொகுதிகளுக்கும்; ஆளுங்கட்சியான காங்கிரஸ், வெறும் ஏழு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ம.ஜ.த., போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பெங்களூரின் மூன்று தொகுதிகளை, காங்கிரஸ் குறிவைத்துள்ளது. வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
பெங்களூரின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய தொகுதிகளுக்கு, செல்வாக்குமிக்க வேட்பாளர்களை தேடுகிறது.
பெங்களூரு மத்திய தொகுதியில், பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான சாது கோகிலா, காங்கிரஸ் சீட் எதிர்பார்க்கிறார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது:
பெங்களூரு மத்திய தொகுதியில், காங்கிரஸ் சீட் எதிர்பார்க்கிறேன். நான் ஒரு கலைஞன் என்பதால், அனைத்து சமுதாயத்தினரும், என்னை விரும்புவர். நான் எப்போதும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை. அனைவரையும் சமமாக பார்க்கிறேன்.
எனக்கு சீட் வழங்கும்படி சாம்ராஜ்பேட், சிவாஜிநகரின் கிறிஸ்துவ சமுதாயத்தினர், காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்துகின்றனர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட்டு, வெற்றி பெறுவேன். கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதுகோகிலா, கர்நாடகா திரைப்பட அகாடமி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.- நமது நிருபர் -

