நடிகர் வடிவேலு பட பாணியில் குளத்தை காணவில்லை என புகார்
நடிகர் வடிவேலு பட பாணியில் குளத்தை காணவில்லை என புகார்
ADDED : ஜன 02, 2024 01:08 AM
பாட்னா,ஒரு திரைப்படத்தில், 'கிணற்றை காணவில்லை' என, நடிகர் வடிவேலு கூறுவதை போல, பீஹாரில், 'குளத்தை காணவில்லை' என, போலீசில் கிராம மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தர்பங்கா மாவட்டத்தின் ஊரக பகுதியில், குளம் ஒன்று அமைந்திருந்தது. இதிலுள்ள நீரை, சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஒரு சிலர் குளத்தில் மீன் பிடித்தும் வந்தனர்.
இதற்கிடையில், குறிப்பிட்ட குளம் உள்ள பகுதியில், நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருவதை அறிந்த நில மாபியாக்கள், குளத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் மணலை கொட்டி நிரப்பத் துவங்கினர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதனால், குளத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை, நில மாபியாக்கள் கைவிட்டதாக அப்பகுதி மக்கள் எண்ணினர். எனினும், இரவு நேரங்களில் குளத்தை ஆக்கிரமிக்கும் பணியை, நில மாபியாக்கள் ரகசியமாக மேற்கொண்டு வந்தனர்.
மொத்த குளத்தையும் மணலால் நிரப்பி, அங்கு குடிசைகளையும் நில மாபியாக்கள் அமைத்ததை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி புகார் அளித்த நிலையில், போலீசார் அங்கு விசாரணை நடத்தச் சென்றனர். இதை அறிந்த நில மாபியாக்கள், அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

