ADDED : ஜன 09, 2025 12:36 AM

திருவனந்தபுரம்: பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதாக நடிகை ஹனிரோஸ் புகாரளித்ததை அடுத்து, கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் பாபி செம்மனுார் நேற்று கைது செய்யப்பட்டார்.
மலையாளநடிகை ஹனி ரோஸ், 33. தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாக சமீபத்தில் குற்றஞ்சாட்டிஇருந்தார்.
தன் சமூக வலைதளப் பதிவில் ஹனி ரோஸ் கூறியிருந்ததாவது:
பிரபல தொழிலதிபர் ஒருவரின் வணிக நிறுவன திறப்பு மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற நடிகையரை போல நானும் சென்றேன்.
ஒரு பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தேன்.
என்னைப் பற்றிய இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது என்றேன். அந்த தொழிலதிபரின் நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் மறுத்துவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து என் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவரது செயல் என்னை பழிவாங்குவதுபோல் உள்ளது.
ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் ஹனிரோஸ் புகார் அளித்தார்.
இறுதியில், இதுகுறித்து கொச்சி போலீசில் அவர் புகார் அளித்தார். சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், கேரளா மட்டுமின்றி சர்வதேச அளவில், 'செம்மனுார் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் தொழிலதிபர் பாபி செம்மனுாரை நேற்று கைது செய்தனர்.
அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பாபி, ''எனக்கும், நடிகைக்கும் எந்த மோதலும் இல்லை. அவர் கூறுவதுபோல் இழிவான வார்த்தைகள் எதுவும் நான் பேசவில்லை. அவரை ஒரு நண்பராகவே நான் பார்க்கிறேன். பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து கொள்கிறேன்,'' என்றார்.