ADDED : ஏப் 08, 2024 09:43 PM

புதுடில்லி
: ''நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை. என்னைப் பற்றி இதுபோன்ற
வதந்திகளை பரப்புவது வெட்ககேடானது,'' என, ஹிமாச்சல் பா.ஜ.,
வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்து உள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக, நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
கர்நாடக
காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் கங்கனா ரனாவத் பற்றி
தரக்குறைவான கருத்தை சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையானது. இது
முடிவுக்கு வந்த சில தினங்களில் அடுத்த சர்ச்சை கருத்து வெளியானது.
கங்கனா
குறித்து, மஹாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்.,கை
சேர்ந்தவருமான விஜய் வடேட்டிவார் -சமீபத்தில் பேசுகையில், 'நடிகை
கங்கனா ரனாவத் மாட்டுக்கறி உண்பதாக முன்னர் தெரிவித்துஉள்ளார்.
அப்படிப்பட்டவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ., சீட்
வழங்கியுள்ளது' என்றார்.
இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து தன் சமூகவலைதளத்தில் கங்கனா
பதிவிட்டுள்ளதாவது:நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. இது போன்ற
அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது வெட்ககேடானது. பல
ஆண்டுகளாகவே யோகா மற்றும்
ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறேன். இதுபோன்ற அவதுாறு கருத்துக்களால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த
முடியாது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
