துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி 'கின்னாரா அகாடா'வில் இருந்து நீக்கம்
துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி 'கின்னாரா அகாடா'வில் இருந்து நீக்கம்
ADDED : பிப் 01, 2025 01:57 AM

லக்னோ, துறவறம் ஏற்ற, பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை கின்னாரா அகாடாவிலிருந்து நீக்குவதாக அதன் நிறுவனர் அஜய் தாஸ் நேற்று அறிவித்தார்.
பாலிவுட் திரையுலகில், 1990களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி, 52. இவர், நண்பர்கள் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
வாய்ப்புகள் குறையத் துவங்கியதும், 2000ம் ஆண்டு துவக்கத்தில் திரையுலகில் இருந்து ஒதுங்கினார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்வுக்கு வந்த மம்தா குல்கர்னி, கின்னாரா அகாடாவில் இணைந்து துறவறம் ஏற்றார்.
கின்னாரா அகாடா என்பது, திருநங்கையரால் 2018ல் துவங்கப்பட்ட ஆன்மிக பயிற்சி மைய அமைப்பு.
இந்த அமைப்பு சார்பில் மம்தாவுக்கு, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சமுதாய மேம்பாட்டுக்காக உழைக்கும் ஆன்மிக தலைவர்களுக்கு வழங்கப்படும், மகா மண்டலேஷ்வர் பட்டம் வழங்கப்பட்டது. தன் பெயரை மாய் மம்தா நந்தகிரி என மாற்றிக் கொண்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கின்னாரா அகாடாவுக்குள் நடிகையை சேர்த்ததுடன், அவருக்கு மகா மண்டலேஷ்வர் பட்டம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கின்னாரா அகாடாவின் நிறுவனர் அஜய்தாஸ் நேற்று கூறுகையில், ''என்னுடைய கவனத்துக்கு வராமலேயே, மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஷ்வர் லஷ்மி நாராயண் திரிபாதி, அகாடாவில் இணைத்துள்ளார். அவர்கள் இருவரையும் கின்னாரா அகாடாவில் இருந்து நீக்குகிறேன்,'' என்றார்.
இது கின்னாரா அகாடாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நீக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் லஷ்மி நாராயண் திரிபாதி கூறுகையில், ''அஜய் தாஸ் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு கின்னாராவில் இடமில்லை. அவரை நீக்குகிறோம்,'' என, தெரிவித்துள்ளார்.
மம்தா குல்கர்னி வரவால், கின்னாரா அகாடாவில் பிளவு ஏற்பட்டுள்ளது.