ரம்பாபுரி மடத்துக்கு ரோபோடிக் யானை நடிகை ஷில்பா ஷெட்டி காணிக்கை
ரம்பாபுரி மடத்துக்கு ரோபோடிக் யானை நடிகை ஷில்பா ஷெட்டி காணிக்கை
ADDED : டிச 15, 2024 11:05 PM

சிக்கமகளூரு: பிரசித்தி பெற்ற ரம்பாபுரி மடத்துக்கு, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், ரோபோடிக் யானையை காணிக்கையாக செலுத்தினர்.
சிக்கமகளூரின் என்.ஆர்.புராவில் ரம்பாபுரி மடம் உள்ளது. இந்தியாவின் பஞ்ச பீடங்களில், முதல் பீடமாகும். ரம்பாபுரி மடத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், மடத்தின் தீவிர பக்தை. தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் அவ்வப்போது மடத்துக்கு வந்து செல்வது வழக்கம்.
ரம்பாபுரி மடத்துக்கு ஷில்பா ஷெட்டி தம்பதி ரோபோடிக் யானையை காணிக்கையாக வழங்கினர். இந்த யானையை ரம்பாபுரி மடாதிபதி சோமேஸ்வர சுவாமிகள், நேற்று திறந்து வைத்தார். இந்த ரோபோடிக் யானை, பார்ப்பதற்கு உண்மையான யானை போன்றே தோற்றம் அளிக்கும். காது, தலை, தும்பிக்கையை அசைத்து கொண்டே இருக்கும். இதை பார்த்தால் உயிருள்ள யானை நின்றிருப்பதை போன்று காணப்படும்.
உண்மையான யானையை மடத்துக்கு காணிக்கையாக அளிக்க, சில சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே நிஜ யானைக்கு பதிலாக, ஷில்பா ஷெட்டி தம்பதி, ரோபோடிக் யானையை காணிக்கையாக செலுத்தினார். இதை பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, நேற்று ரம்பாபுரி மடத்துக்கு வருகை தந்தார். ரேணுகாச்சார்யா, வீரபத்ரரை தரிசனம் செய்தார். கர்நாடகாவின், எடியூர் சித்தேஸ்வரா கோவிலில் ரோபோடிக் யானை உள்ளது.

