மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நடிகைகள் பாலியல் விவகாரம்; கேரளாவுக்கு விரையும் தேசிய மகளிர் ஆணையம்
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நடிகைகள் பாலியல் விவகாரம்; கேரளாவுக்கு விரையும் தேசிய மகளிர் ஆணையம்
ADDED : செப் 22, 2024 03:40 PM

திருவனந்தபுரம்: மலையாள நடிகைகள் பாலியல் விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு, பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், பல நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது.
ஹேமா கமிட்டி 3,896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் வெறும் 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 20 பேரிடம் இதுவரை சாட்சிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கி உள்ளது. சாட்சிகளிடம் முதல் கட்ட விசாரணை செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும்.
இந்த விசாரணை குறித்து தகவல், அக்டோபர் 3ம் தேதி ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டி தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரளாவுக்கு நேரில் சென்று நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகளிடம் நேரடியாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது. பா.ஜ., தலைவர் சந்தீப் வச்சஸ்பதி மற்றும் பி.ஆர்., சிவசங்கர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆக.,31ம் தேதி தேசிய மகளிர் ஆணையம் கேரள தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
விரைவில் தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு சென்று விசாரணை நடத்தும் என்பதால், கேரள திரையுலகின் பாலியல் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.