கடற்படைக்கு 'திரிஷ்டி ட்ரோன்' அதானி நிறுவனம் வழங்கியது
கடற்படைக்கு 'திரிஷ்டி ட்ரோன்' அதானி நிறுவனம் வழங்கியது
ADDED : டிச 04, 2024 11:03 PM

புதுடில்லி :'அதானி டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ்' எனப்படும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், இந்திய கடற்படையின் கண்காணிப்பு மற்றும் உளவுப்பணிக்காக 'திரிஷ்டி - 10' எனும் ஆளில்லா சிறிய ரக விமானத்தை வினியோகித்தது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த, 'அதானி டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனம், 'திரிஷ்டி - 10 ஸ்டார்லைனர்' என்ற பெயரில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை தயாரிக்கிறது. இவை ஹைதராபாத்தில் உள்ள அதானி நிறுவன ஆலையில் வடிவமைக்கப்படுகிறது.
இந்த வகை ட்ரோன் 36 மணிநேரம் இடைவிடாமல் பறக்கும் திறனுடையது. 450 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும். 10,000 அடி உயரம் முதல் 30,000 அடி உயரம் வரை பறந்து பெரிய அளவிலான பரப்பை கண்காணித்து, உளவு பார்த்து தகவல்களை வழங்கும். அனைத்து தட்பவெப்ப நிலையில் பறக்கக் கூடிய இந்த ட்ரோன், நேட்டோவின் சான்றிதழ் பெற்றுள்ளது.
இஸ்ரேலின் 'ஹெர்மெஸ் - 900' வகை ட்ரோனுக்கு இணையான 'திரிஷ்டி - 10' நவீன தொழில்நுட்பத்துடன் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. 'திரிஷ்டி - 10' முதல் ட்ரோன் கடந்த ஜனவரியில் கடற்படைக்கு வழங்கப்பட்டது. நம் நாட்டு ராணுவமும், பாகிஸ்தான் எல்லையைக் கண்காணிக்க இரண்டு ட்ரோன்களுக்கு ஆர்டர் வழங்கியிருந்தது. அதில் ஒன்று ஜூனில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடற்படைக்கு இரண்டாவது 'திரிஷ்டி - 10' ட்ரோன் சமீபத்தில் வழங்கப்பட்டது. அது குஜராத்தின் போர்பந்தரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கடற்படையில் இணைக்கப்பட்டது.