அதானி விவகாரம்; இதுக்கு என்ன சொல்றீங்க? காங்கிரஸூக்கு பா.ஜ., கேள்வி
அதானி விவகாரம்; இதுக்கு என்ன சொல்றீங்க? காங்கிரஸூக்கு பா.ஜ., கேள்வி
UPDATED : நவ 21, 2024 03:38 PM
ADDED : நவ 21, 2024 01:47 PM

புதுடில்லி: அதானி மீது அமெரிக்கா முறைகேடு குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சியினர் பரஸ்பரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரிய ஓளி மின்சார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி 25 கோடி டாலர்கள் லஞ்சமாக கொடுத்து இருப்பதாகவும், அதனை மறைத்து அமெரிக்க முதலீடுகளைப் பெற்று மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இதையடுத்து, அதானி குழு நிறுவன பங்குகளின் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடியையும், பா.ஜ., அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதானியின் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரதமரின் நெருக்கமான தொழிலதிபரை பற்றி ஒரு கேள்விக்கும் பதில் வரவில்லை.
தற்போது, இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்திருப்பதும், அதானியை இவர்கள் நேரடியாக சந்தித்து இருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அதானியின் இந்த ஊழலை விசாரிக்க நம்பகத்தகுந்த புதிய செபி தலைவரை நியமிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், பார்லிமென்ட கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும், என வலியுறுத்தினார்.
இதற்கு பா.ஜ., தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாள்வியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்கள் 12 ஜிகா வாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில மின்விநியோக நிறுவனங்களுடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அதிக விலையை காரணம் காட்டி, மின்சாரத்தை வாங்க மாநில மின்விநியோக நிறுவனங்கள் முன்வரவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஒடிசா (பிஜூ ஜனதா தளம்), தமிழகம் (தி.மு.க.,), சத்தீஸ்கர் (காங்கிரஸ்) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் (ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் (முந்தைய ஆட்சி)) உள்ளிட்ட மாநிலங்களுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலரை அதானியும், அமெரிக்க நிறுவனமும் வழங்கின. இதில், நடந்துள்ள முறைகேடுகளை ஒப்புக்கொள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தயாரா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.