ADDED : ஜன 03, 2024 01:39 AM

புதுடில்லி மருத்துவமனைகளில் உள்ள, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பதற்கு பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நோயாளி அல்லது நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஐ.சி.யு.,வில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது என, அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில், ஐ.சி.யு.,வில் நோயாளிகளை சேர்ப்பது தொடர்பாக, 24 நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
இந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவமனைகளில், ஐ.சி.யு.,வில் நோயாளிகளை சேர்ப்பது குறித்து புதிய நடைமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
வேறு சிகிச்சை இல்லை
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அடுத்ததாக வேறு சிகிச்சை இல்லை அல்லது சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், நோயாளியை, ஐ.சி.யு.,வில் சேர்க்கக் கூடாது. அதுபோல, நோய் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள, பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், ஐ.சி.யு.,வில் சேர்க்கக் கூடாது.
நோயாளி அல்லது அவருடைய நெருங்கிய குடும்ப உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஐ.சி.யு.,வில் சேர்க்க மருத்துவமனைகள் வற்புறுத்தக் கூடாது.
அதுபோல, ஐ.சி.யு., தொடர்பாக மனரீதியில் அல்லது கொள்கை ரீதியில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள், அதில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தாலும், ஐ.சி.யு.,வில் சேரும்படி மருத்துவமனைகள் நெருக்கடி தரக் கூடாது.
பெருந்தொற்று, பேரிடர் காலங்களில், மருத்துவமனையில் உள்ள வசதிகளின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையிலேயே, நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
வாய்ப்பு
உடல் உறுப்பு செயலிழந்தது அல்லது அது செயல்பட மருத்துவ வசதி தேவை அல்லது நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது போன்ற சூழ்நிலைகளில் தான், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும்.
மூச்சுத் திணறல் பிரச்னை, நோய் தீவிரமாவது, தொடர் கண்காணிப்பு தேவை, செயலிழக்கும் உடலுறுப்புகளை மேம்படுத்த சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கலாம்.
இதய செயல்பாட்டில் மாறுபாடு ஏற்படுதல், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உரிய இடமில்லாமல் காத்திருக்கும், அதே நேரத்தில் அங்கு சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ரத்த அழுத்தம், நாடி, சுவாச அளவு, இதயத்தின் செயல்பாடு, உடலில் ஆக்சிஜனின் அளவு, சிறுநீர் வெளியேற்றும் அளவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.